மீண்டும் ஒரு ஜாலியன் வாலாபாக் – தூத்துக்குடி

சிறப்பு செய்திகள்

விதிகளை மீறி சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சட்டப்போராட்டமும், மக்கள் போராட்டமும் இந்தியாவில் சக்திவாய்ந்த ஒரு தொழில்குழுமத்தின், உலகின் மிகப்பெரிய ஆலை ஒன்றை இழுத்து மூட வைத்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கொடுத்த விலை தான் ரொம்ப அதிகம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதால், அதனை மூட வேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி,13 பேரை கொன்று குவித்தது. ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷ் ராணுவம் உயிர்களை வேட்டையாடியதைப் போல தமிழக காவல்துறையும் மனித உயிர்களை வேட்டையாடி உள்ளது. இப்படி தமிழகத்தையே உலுக்கி உள்ளது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல வருடங்களாக தூத்துக்குடி மக்கள் பல்வேறு வகையான போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை அறவழியில் மேற்கொண்டு வருகின்றனர். ஆலையின் அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகளை உடனே தடுத்து நிறுத்தக் கோரியும், ஆலையை மூடக்கோரியும் கடந்த பிப்ரவரி 14-ம் தேதியிலிருந்து தூத்துக்குடி மக்கள் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். 99 நாட்களை கடந்து போராடிய மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கந்தையா, சண்முகம், மணிராஜ், ஸ்நோலின், வினிதா, கிளாஸ்டன், ஆண்டனி செல்வராஜ், ரஞ்சித்குமார், தமிழரசன், கார்த்திக், காளியப்பன், ஜான்சி உள்பட  13 பேர் உயிரிழந்தனர். 65 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உயிரிழந்த நிலையில் கிடக்கும் காளியப்பனை, காவல்துறையினர் காலில் தட்டி உதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், உயிரிழந்த நிலையில் கிடைக்கும் காளியப்பனை, “அவன் நடிக்கிறான். டேய் நடிக்காத எழுந்திரிடா” என்று கூறி அதட்டுகின்றனர். அப்போது ஒரு காவலர் காளியப்பன் கையை காலால் தட்டி உதைக்கின்றார். ஆனால் உயிர் பிரிந்த காளியப்பன், அசைவின்றி கிடக்கின்றார்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தமிழரசனின் இல்லத்திலிருந்த அவரது நண்பர்களிடம் பேசினோம். மக்களுக்காகப் போராட்டங்களில் கவனம் செலுத்தி வந்ததால் தமிழரசன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது அப்பா உயிருடன் இல்லை. அம்மா, அண்ணனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். போராட்டத்தின் போது எப்போதும்போல மக்களுடன் இணைந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராகக் குரலெழுப்பியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது , துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டுகள் தமிழரசனின் உயிரைப் பறித்தது. “1996-ல இருந்தே ஸ்டெர்லைட்டுக்காக தமிழரசன் போராடிட்டு இருக்காரு. அவர் எப்பவும் போல போராட்டக் களத்துல இருந்தப்ப வந்த துப்பாக்கிக் குண்டு, அவரோட நெத்திப் பகுதில மூளைக்குப் பக்கத்துல பாய்ஞ்சு அவரோட உயிர் போயிருச்சு. அவரோட உடம்பு முழுக்க ரத்தம் சிதறி அவர் விழுந்து கிடந்த இடமே ரத்தக்காடா இருந்ததைப் பார்க்கமுடியலை. அது மட்டுமல்லாம அவரோட அண்ணனையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணிருக்காங்க. `ஏன் கைது பண்ணுனீங்க’னு தோழர்கள் கேட்டதுக்கு அவரு கறுப்புச் சட்டை போட்டிருந்தாருனு சொல்லிருக்காங்க” என்றார் அவரது நண்பர் வேதனையுடன்.

தமிழரசனின் தாய் லட்சுமியின் நிலைமைதான் மோசமானது. ஒரு மகன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகிவிட்டார். மற்றொரு மகன் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே போல், ஜான்சியின் உடைந்த மண்டை ஓட்டின் ஒரு துண்டும், சிதறிய மூளையும் தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கிராமத்தின் நுழைவுப்பகுதியில் கிடந்தன. தன்னுடைய வீட்டில் இருந்து அவரது சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக வெளியேவந்த சில நிமிடங்களில் துப்பாக்கிச்சூட்டிற்கு 45 வயதான ஜான்சி பலியானார்.

ஜான்சியை காணாமல் தவித்த அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து போது, நிவேதா என்ற 25 வயது பெண்ணை தான் சுட்டதாகவும், அனாதை பிணத்திற்கான அடையாள வில்லையும் காட்டியுள்ளனர், மருத்துவர்கள். ஆனால் இறந்தது தனது சகோதரி தான் எனவும், அவரது கையில் கவரிங் வளையல் இருக்கும் எனவும் பிணவறையை திறக்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அவரது சகோதரி ரோசம்மாள்.

வேறு வழியின்றி பிணவறையில் இருந்த ஜான்சியின் உடலை அவரது உறவினர்களிடம் காட்டியுள்ளனர், மருத்துவர்கள். அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் ஜான்சியின் கணவர் ஜெசுபாலனிடம் பேசமுடியவில்லை. அவரது மூன்று மகள்கள் உட்பட 4 பிள்ளைகள் தாயை இழந்த தவிப்பில் அவரைக் கட்டி அணைத்துக் கதறிய காட்சி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

”ஜான்சி தலை சிதறிப்போனத பாத்தா, ரொம்பவும் பக்கத்தில் நின்னுதான் சுட்டுருக்காங்கனு தெரியும். நாங்க அமைதி முறையில போராட வந்தோம், எங்களை அடிச்சாங்க. ஜான்சி எதிலயும் கலந்துக்கிடல. ஆன அவுங்கள ஏன் சுட்டாங்க,” என குடும்ப உறவினரை இழந்த வருத்தத்திலும், கோபத்திலும் கேட்கிறார், ஜான்சன்.

“நாமும் போராட வேண்டும் என்று மக்களோட சேர்ந்து போராட்டத்துல கலந்துகிட்டா என் மகள். ஆனா அவளை ஏன் இவ்வளவு கோரமா கொல்லனும்?” தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 18 வயது ஸ்னோலினின் தாய், வனிதா.

மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தத் தாய், வேதனை தாள முடியாமல் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வீடே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. அந்தத் தாய்க்கும் குடும்பத்தாருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் உறவினர்கள் அனைவரும் அங்கு கூடியிருக்கிறார்கள்.

 

“சாப்பிடறது, தூங்கறது மட்டும்தான் வாழ்க்கையாம்மா? நம்மளும் போராடனும்” என்று தாயிடம் கூறியிருக்கிறார் ஸ்னோலின்.

அவரது தெருவில் சில வாரங்களுக்கு முன்னால் புற்று நோயால் ஒருவர் உயிரிழந்தார். இதுதான் ஸ்னோலினை போராடத் தூண்டியது என்று அவரது தாய் வனிதா குறிப்பிடுகிறார்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்திற்கு ஸ்னோலினும், அவரது தாய் வனிதாவும் சென்றுள்ளனர். போராட்டம் பெரிய அளவில் உருவெடுக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது இருவரும் பிரிந்துவிட்டதாக கூறுகிறார் வனிதா.

“மக்கள் அங்கயும் இங்கயும் ஓட, குண்டு சத்தமெல்லா கேட்டுது. நான் வீட்டுக்கு வந்துட்டேன். ஆனா ஸ்னோலின காணலை. அப்பறம் அவ இறந்தத டிவி செய்தியில பாத்துதான் தெரிஞ்சுகிட்டேன்” என கண்கலங்குகிறார், வனிதா.

அரசு மருத்துவமனைக்கு வனிதா விரைந்தார். அவருக்கு அங்கு மேலும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

“பின்மண்டைல குண்டடிபட்டு வாய் வழியா வெளிய வந்துருக்கு. இவ்வளவு கோரமா என் பொன்னை ஏன் கொல்லனும்? அந்த ஆலையால பாதிப்பு இருக்குனுதான போராடினோம். அதுக்கு இப்டி குருவி சுட்ற மாதிரி சுட்டுட்டாங்க. எம் புள்ளைய நானே கூட்டிட்டு போய் பலி குடுத்துட்டேன். அந்த ஆலையை நிரந்தரமாக மூடினாதான் என் மகளோட ஆத்மா சாந்தியடையும்” என்று கலங்குகிறார், வனிதா.

மாசுக்கட்டுப்பாட்டு அறிக்கை

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஒரு விஷயத்தைப் பரமரகசியமாக வைத்திருந்தனர். அது ஸ்டெர்லைட் பற்றிய தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கை. மார்ச் 28ஆம் தேதி தமிழக மாசுக் கட்டுப்பட்டு வாரியத்தின் சார்பில் ஸ்டெர்லைட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நீர் மாதிரிகள் அனைத்துமே மாசடைந்துள்ளன என ஆய்வு முடிவு சொல்கிறது. இதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடாமலேயே வைத்திருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல இடர்பாடுகளுக்கு இடையே சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் இந்த அறிக்கையை வாங்கினர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய நித்யானந்த் ஜெயராமன், “தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறை இணைந்த குழு ஒன்று, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் ஏழு இடங்களிலிருந்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுங்ளள கிராமங்களில் எட்டு இடங்களிலிருந்தும் நிலத்தடி நீர் மாதிரிகளை மார்ச் 28ஆம் தேதி சேகரித்தது. இந்தத் தண்ணீரை வாரியத்தின் ஆய்வகத்தில் ஆய்வு செய்தது. அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொன்ன அரசு, ஆய்வறிக்கை தயாராகியும், அதை ரகசியமாகவே வைத்திருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வாங்கிய இந்த ஆய்வறிக்கை, ‘நீர் மாதிரி எடுக்கப்பட்ட 15 இடங்களிலுமே, நிலத்தடி நீர் குடிப்பதற்குத் தகுதியற்றதாக இருக்கிறது’ என்பதை உறுதி செய்கிறது. இங்கிருக்கும் நிலத்தடி நீரில் சல்பேட், கால்சியம், மெக்னீசியம், ஈயம், ஃப்ளோரைடு போன்றவை இந்திய தர நிர்ணய ஆணையம் நிர்ணயித்த குடிநீர்த் தர அளவுகளைவிட மடங்கு அதிகமாக உள்ளன. குறிப்பாக குழந்தைகளின் நரம்பு மண்டலம், மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் ஈயமானது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட சில இடங்களில் 53 மடங்கு அதிகமாக உள்ளது. ஆய்வறிக்கையின்படி கால்சியம், சல்பேட் மற்றும் ஃப்ளோரைடு ஆகிய தனிமங்கள், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஆலை வளாகத்திற்குள் எடுக்கப்பட்டமாதிரிகளில் அதிகமான அளவில் உள்ளன. ஆலை வளாகத்தில் குவிந்து கிடக்கும் திடக்கழி-வகளைச் சரியான முறையில் கையாள வேண்டும். அதைச் செய்யாவிட்டால், கால்சியம், சல்பேட் மற்றும் ஃப்ளோரைடு போன்ற ரசாயனங்கள் கசிந்து சுற்று வட்டாரத்தில் இருககும் ரசாயனங்கள் கசிந்து சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிலத்தடி நீரை மாசுபடுத்தக்கூடும்.

கடந்த முறை ஸ்டெர்லைட் உரிமம் ரத்து செய்யப்பட்ட போது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை எதிர்த்து அந்த ஆலை வழககு தொடர்ந்தது. அப்போது, ஸ்டெர்லைட் பல ஆவணங்களைக் கொடுத்தது. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் 16 இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் குறைவான அளவில் மாசு இருந்ததாகச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இப்போதைய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இப்போதைய ஆய்வானது, ஸ்டெர்லைட்டின் வாதத்துக்கு நேர்மாறாக உள்ளது. ஆய்வில் காட்டப்பட்டுள்ள 32 முடிவுகளில் 31 முடிவுகளில் உப்பின் அளவானது நிர்ணய தர அளவைவிட அதிகமாகக் காணப்பட்டுள்ளது. 32 தனிமங்களைக் கண்டறியும் முடிவுகளில் 30 முடிவுகளில் சல்பேட்டும், ஆறு முடிவுகளில் ஃப்ளோரைடும், 31 முடிவுகளில் கால்சியமும், 30 முடிவுகளில் மெக்னீஷியமும், 28 முடிவுகளில் இரும்பும், அவற்றின் நிர்ணய அளவைவிட அதிகமாக உள்ளன.

ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு கொடுக்கும் தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள்ளும், அருகேயுள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்திப்பதை ஆய்வில் அறிந்தும் அறிக்கையை ரகசியமாக வைத்துள்ளது. இது மக்களுக்கு எதிரான அரசின் போக்கையே காட்டுகிறது” என்றார்.

இதுபற்றிப் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், “நச்சுப் புகையைக் கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என 100 நாள்களாகப் போராட்டம் நடத்தும் மக்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வில்லை. ஊர்வலத்திற்க அனுமதி தரவில்லை. நள்ளிரவில் வீடு புகுந்து போராட்டக்காரர்கள் பலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள். இப்படியெல்லாம் போராட்டத்தை முடக்க அரசு நடவடிக்கை எடுத்ததால்தான், போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. அமைதியான முறையில் போராட்டத்தையும் நடத்த அரசு அனுமதித்திருந்தால் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்காது, தமிழக அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையை மறைத்து, ஸ்டொலைட் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு மக்களிள் உயிரைக் குடித்துவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோரைப் படுகாயப்படுத்திவிட்டது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்த ஆய்வின் முடிவுகள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைந்துள்ளன. அதை வெளியிட விரும்பாத தமிழக அரசு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. இந்த அரசு மக்களுக்கானதா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானதா? என எதிர்க்கேள்வி கேட்கிறார், அரிபரந்தாமன்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடும் மக்களோடு பேசி, 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலோ அல்லது அதற்கு முன்பாகவே ஊர்க்கூட்டங்களிலோ அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கள ஆய்வு விபரங்களை தெரிவித்திருக்க முடியும். மாறாக, அரசு எதற்குத் திட்டமிட்டது என்ற கேள்விதான் சுற்றிச் சுற்றி வருகிறது என்கிறார், ஜி.ராமகிருஷ்ணன்.

ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிக்கும் என்று மக்கள் நம்பிய அரசு, கார்ப்பரேட் கூலிப்படையாக செயல்பட்டிருக்கிறது. இனியும் தமிழக மண்ணில் ஒரு கார்ப்பரேட் நிறுவன எதிர்ப்பு போராட்டம் எழக்கூடாது என்ற வன்மத்துடன் திட்டமிட்டே இந்தப் படுகொலை நடந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் தூத்துக்குடியில் கேட்ட துப்பாக்கிச் சத்தம் தமிழ்நாடு முழுவதும் கேட்கத் துவங்கிவிடும். தமிழகம் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தருணம் இது என கொந்தளிக்கிறார், ஜி.ராமகிருஷ்ணன்.

இப்போது ஆலையை மூட நடவடிக்கை எடுத்த அரசு இதனை முன்கூட்டியே செய்யாதது ஏன்? உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 99 நாட்களாக கிராம அளவில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒருமுறை கூட மாவட்ட ஆட்சியர் சந்திக்காதது ஏன்? 99 நாட்களும் போராடி, கடைசி நாளில் 9 கி.மீ., தூரமும் எந்த வன்முறையும் இல்லாமல் நடந்து சென்ற மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி கொலைவெறித்தாண்டவம் ஆடியது ஏன்? துப்பாக்கிச் சூடு நடந்தே ஆக வேண்டும் என சதித் திட்டம் தீட்டியது யார்? துப்பாக்கிச் சூடு நடத்துகிற பட்சத்திலும் முழங்காலுக்கு கீழே சுட்டு கூட்டத்தை கலைக்க வாய்ப்பிருந்தும் அதைச்செய்யாமல் உயிரை பறிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு சுட்டுக்கொன்றது ஏன்? ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொன்ற காவல்துறையினர், மேலும், மருத்துவமனை, திரேஸ்புரம், அண்ணா நகர், குடோன் பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்? குழந்தைகளைக் கையில் ஏந்திக் குடும்பம் குடும்பமாக ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி சென்ற மக்களை துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டு சாகடித்தது எந்த விதத்தில் நியாயம்?  
துப்பாக்கிச் சூடு போன்ற முடிவுகளை தன்னிச்சையாக மேற்கொள்ளும் அமைப்பல்ல காவல்துறை. தனியார் தொலைக்காட்சியில் இதுபற்றி வெளியான ரகசிய வீடியோவில், ‘மாஜிஸ்திரேட் நிலையில் உள்ள அதிகாரி உத்தரவின் பேரில்தான்’ துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.அப்பாவிகளோடு, போராட்டத்தில் வீரியமாக முன்நின்றவர்களையும் தேடித் தேடிச் சுட்டுக் கொன்றுள்ளது போலீஸ் படை.

துப்பாக்கிச் சூட்டின் போது பின்பற்ற வேண்டிய எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் பெருமளவு உயிர்ப் பலி வாங்கும் நோக்கத்துடன் கொலைபாதகச் செயலில் ஈடுபட்டது ஏன்? இதற்கொல்லாம் அரசு என்ன பதில் சொல்ல போகிறது என கேள்வி எழுப்புகிறார், ஆலைக்கு எதிராக போராடிய பாத்திமா.

கலவர பூமியான முத்து நகரம்

இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர். காவல்துறையினரின் வேன்கள், இருசக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்டன. ஏடிஎம்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பல கோடி இழப்பு ஏற்பட்டதுடன், கலவர பூமியாக காட்சியளித்தது, தூத்துக்குடி.

இணையதளம் முடக்கம்

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையத்தை முடக்கி உத்தரவிட்டது அரசு. இது புரளி பரவுவதைத் தடுக்கும் முயற்சியா, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் செயலா? என வாதம் உருவானது. ”இயற்கை சூழலை பாதிப்புக்கும் தொழிற்சாலையை எதிர்த்துப் போராடிய மக்களிடம் இணக்கமாக நடந்து கொள்ளாமல், இணையத்தை முடக்கி தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்குக் கையாளும் நடவடிக்கைகளை எடுத்து, தமிழக அரசு தனது சர்வாதிகார போக்கை வெளிப்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆலையை நிரந்தரமாக மூடுவது சாத்தியமா?

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை புதுப்பிக்க கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து விட்டது. அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடும்படி கடந்த மே 23 ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆணையிட்டது. அதன்படி ஆலை மூடப்பட்டிருந்த நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை அடிப்படையாகக் கொண்டு, அந்த ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அரசாணை சட்டத்தின் முன் நிற்காது என்பது தான் உண்மையாகும். ஏனெனில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் முன் வைக்கப்பட்ட காரணம் வலுவற்றதாகும். ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து விட்ட நிலையில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகளில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஈடுபட்டிருந்தாகவும், இதை கடந்த மே 18, 19 ஆகிய தேதிகளில் ஆலையை ஆய்வு செய்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும் அதனடிப்படையில் ஆலையை மூட ஆணையிட்டதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்நடவடிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாகவே அமையும்.

ஓர் ஆலையை மூடுவது எளிதான ஒன்றல்ல. ஆலையை மூடி பிறப்பிக்கப்படும் அரசாணை என்பது ஸ்பீக்கிங் ஆர்டருக்கு இணையாக விரிவான காரணங்களைப் பட்டியலிட்டிருக்க வேண்டும். ஒரு பத்தியில் அரசாணை பிறப்பிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 1994 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்ட எந்த நிபந்தனையையும் ஸ்டெர்லைட் ஆலை மதிக்கவில்லை. இதைக் காரணம் காட்டியே ஆலையை மூடியிருக்கலாம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆலைக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான ஐந்தாண்டுகளில் சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான விபத்துகள் ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்துள்ளன. அத்தகைய விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, ஆலைக்கு எதிராகப் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்களையும் பதிவு செய்து அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக ஸ்பீக்கிங் ஆர்டர் பிறப்பித்து இருந்தால் அது மிகவும் வலிமையானதாக இருந்திருக்கும். அதை எதிர்த்து எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையால் வெற்றி பெற முடியாது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உள்ளன. நீதிமன்றங்களையும், அரசையும், அந்நிறுவனம் ஏமாற்றியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தித் திறன் கடந்த 2006 ஆம் ஆண்டில் தினமும் 900 டன் என்ற அளவிலிருந்து 1200 டன் ஆக அதிகரிக்கப்பட்டது. இதற்கு தேவையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க ஆலை வளாகத்தில் 172.17 ஹெக்டேர் நிலம் தேவை. ஆலையிடம் 102 ஹெக்டேர் மட்டுமே நிலம் இருந்த நிலையில், போதுமான நிலம் இருப்பதாகக் கூறி தமிழக அரசை ஏமாற்றியது. சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க 43 ஹெக்டேருக்கு பசுமைவெளி உருவாக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், அந்த விதியை ஆலை மதிக்கவில்லை.

1,200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் ஆலையில் புகைபோக்கி 123 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் புகைபோக்கி வெறும் 60 மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர் மாசுபட்டிருப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி, ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் மாசுக்களால் மக்களின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஸ்டெர்லைட் இன்று வரை மதிக்கவில்லை. இவ்வாறு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பல அம்சங்கள் உள்ளன.

ஆனால், இப்போது அபத்தமான காரணத்தைக் கூறி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடரலாம். அவ்வாறு வழக்கு தொடர்ந்தால் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை ரத்து செய்யப்படலாம். இப்படி நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் வலிமையற்ற, அபத்தமானக் காரணங்களைக் கூறி ஓர் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. “நான் அடிப்பது போல அடிக்கிறேன்… நீ அழுவதைப் போல அழு” என்று தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் சொல்லி வைத்துக் கொண்டு நாடகமாடுவதாகவே தோன்றுகிறது.

இந்த நாடகத்தின் முடிவில் பாதிக்கப்படப் போவதும், துரோகத்திற்கு ஆளாகப் போவதும் தமிழக மக்கள்தான். அப்படி ஒரு துரோகம் அரங்கேற்றப்படக் கூடாது. அதை உறுதி செய்ய வேண்டுமானால் ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 22 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகள், உயிரிழப்புகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி அவற்றில் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகக் கொள்கை முடிவு எடுத்து, அம்முடிவுக்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதுதான் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நிரந்தரமாக மூடும் முடிவுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கும். எனவே, மேற்கண்ட வழிமுறையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அது நிரந்தரமாக மூடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கும், மக்கள் நலனுக்கும் தீங்கு என்பது ஸ்டெர்லைட் ஆலையுடன் முடிவடைந்து விடுவதல்ல. தூத்துக்குடி சிப்காட் வளாகம், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட சிப்காட் வளாகங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, மக்களின் உயிரைப் பறிக்கும் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களைக் கொண்டு ஆய்வு நடத்தி, பாதிப்பை ஏற்படுத்தும் ஆலைகளை மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

பாக்ஸ்

இந்தியாவில் வேதாந்தா நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய 4 திட்டங்கள்

வேதாந்தா நிறுவனம் சர்ச்சையில் சிக்குவது முதல்முறையல்ல. கோர்பா விபத்து, நியமகிரி என பலமுறை சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் இந்தியாவில் இயங்குகிறது.

கோர்பா விபத்து

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் அலுமினிய உற்பத்தி நிறுவனத்தை இயக்கி வருகிறது ஸ்டெர்லைட். 2009 ஆம் ஆண்டில் அங்கு கட்டப்பட்டு வந்த பிரமாண்ட புகைக் கூண்டு நொறுங்கி விழுந்ததில் 42 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க சத்தீஸ்கர் மாநில அரசு, பக்‌ஷி கமிஷனை அமைத்தது. ஆணையமும் தனது விசாரணை அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துவிட்டது. ஆனால் அந்த அறிக்கையை மாநில அரசு பகிரங்கமாக வெளியிடவில்லை.

2001 ஆம் ஆண்டில், பால்கோ அரசு நிறுவனம் வேதாந்தாவால் வாங்கப்பட்டதில் இருந்தே சர்ச்சைகள் தொடங்கின.

பால்கோ நிறுவனத்தின் சுரங்கங்கள் மற்றும் பிற ஆலை உபகரணங்களை இந்திய அரசிடமிருந்து 551 கோடி ரூபாய்க்கு வேதாந்தா வாங்கியது.

ஆனால் அரசு நிறுவனமான பால்கோவின் மதிப்பு இதைவிட பல மடங்கு அதிகமானது என்று கூறப்பட்டது.

பால்கோ அரசு நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிராக அதன் தொழிலாளர்கள் நடத்திய எதிர்ப்பு போராட்டங்கள் 60 நாட்கள் வரை நீடித்தது.

நியம்கிரி, ஒடிஷா

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடங்கப்படவிருந்த பாக்ஸைட் தாது சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள் மக்கள். இந்தியா கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள முக்கியமான வனவிலங்கு வாழ்விடமாக கருதப்படும் நியமகிரி மலைப்பகுதிகளில் பாக்ஸைட் எடுப்பது சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் என்று தொடரப்பட்ட இந்த வழக்கை, டோங்காரியா கோன்ட் பழங்குடியினர், தங்கள் கிராம பஞ்சாயத்தில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

12 கிராம கூட்டங்களில் விசாரிக்கப்பட்ட இந்த பாக்ஸைட் சுரங்க திட்டம் ஒருமனதாக நிராகரிக்கப்பட்டது. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இந்த கூட்டங்கள் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டன. இதன்பிறகு 10 லட்சம் டன் திறன் கொண்ட ஒரு சுத்திகரிப்பு ஆலையை லாஞ்ஜிகரில் நிறுவியது வேதாந்தா. நியம்கிரி சுரங்கத் திட்டத்தைவிட, ஆறு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்வதற்கான அனுமதி லாஞ்ஜிகர் சுரங்கத்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி, தமிழ்நாடு

நான்கு லட்சம் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலைக்கு எதிராக பல மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. கடந்த வாரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர். ஆலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். சுற்றுச்சூழல் விதிகளை மீறியதான குற்றச்சாட்டுகளில் 2013ஆம், ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் மீது ரூ 100 கோடி அபராதம் விதித்தது.

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு கூறியது. அதன்பிறகு தொழிற்சாலையை மூடும் உத்தரவையும் உயர் நீதிமன்றம் வழங்கியபோதிலும், அதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.

ஸேசா கோவா, கோவா

சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்கள் என 2012ஆம் ஆண்டு ஷா கமிஷன் குற்றம்சாட்டிய நிறுவனங்களில் சேஸா கோவா நிறுவனமும் ஒன்று. வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான சேஸா கோவா, இரும்பு தாது சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி, சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலினால் அரசுக்கு சுமார் 35,000 கோடி இழப்பு ஏற்பட்டது. தற்போது அனைத்து குத்தகைகளையும் ரத்து செய்யுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், புதிதாக ஏலம் விட்டு சுரங்க ஒதுக்கீடு செய்யவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

பாக்ஸ்

ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு கொடுக்க வந்தனர். எனினும் அவர்களது மனுவை அதிகாரிகள் வாங்காததால் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர். அமெரிக்காவில் உள்ள சார்லோட் பகுதியில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா மற்றும் கனடா தமிழர்கள் அமைதி பேரணி நடத்தினர். நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் காப்பர் தொழிற்சாலையால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு நாடகங்கள் மூலம் செய்து காட்டப்பட்டன. இதுபோல் அமெரிக்காவின் பாஸ்டன், நியூ யார்க், கிளாஸ்கோ பார்க், டல்லாஸ், வாஷிங்டன் டிசி இந்திய தூதரகம், சான் பிரான்சிஸ்கோ, மோரிஸ்வில்லே, டோர்னடோ, கூபர்டினோ, ஆல்ஃபெரேட்டா ஆகிய நகரங்களில் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் சுமார் 200 பேர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், பொதுமக்கள் படுகொலைக்கு நீதி கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் முடிவில் மக்கள் கையெழுத்திட்ட மனு இந்திய தூதரக அதிகாரியிடம் அளிக்கப்பட்டது. மக்களின் உணர்வுகளை இந்திய அரசுக்கு தெரிவிப்போம் என்று தூதரக அதிகாரி வெங்கட்  உறுதி அளித்தார்.

– ஜெசிகா